‘பண இரட்டிப்பு’ மோசடி: தேனியில் இருவர் கைது; ரூ.3.40 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்


கைதானவர்கள்

தேனி: பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக தேனியில் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.3.40 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சொகுசுக் காரில் கட்டுக் கட்டாக பணம் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தேனி காவல் சார்பு ஆய்வாளர்கள் தவசி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சிவாஜி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரை சோதனை செய்த போது காரில் கட்டுகட்டாக கள்ள நோட்டுக்கள் இருந்தது தெரிய வந்தது.

காரை ஓட்டி வந்த கருவேல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சேகர்பாபு (45)என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த கேசவனுக்கும் (36) இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இவரும் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் இவர்கள் இருவரும் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்தது தெரிய வந்தது. அவ்வாறு வருபவர்கள் கொண்டு வரும் பணத்தையும், மொபைல்போன்களையும் பறித்துக் கொண்டு அவர்களை மிரட்டி, துரத்தி விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் இருந்து ரூ3.40 கோடி கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் பணம்,16 செல்போன்கள், மூன்று சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடம் ஏமாந்தவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

x