ஜம்முவில் சர்வதேச எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்திருப்பதாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்முவின் ஆர்னியா பகுதியில் சர்வதேச எல்லைக்கோடு அருகே நேற்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளதாக ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இருவரும், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவரது நிலைமை சீராக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் தரப்பிலிருந்து அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் உள்ள ராணுவப்படை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.