ரூ.25 லட்சம் நிதியுதவி... ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்; 6 பேரின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்!


சிவகாசி அருகே நேற்று நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த அழகாபுரியை சேர்ந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரி அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரெங்கபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கணிஷ்கர் பட்டாசு கடையில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி அழகாபுரி சாலையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போராட்டம்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் சி.வி.கணேசன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தால் மட்டுமே உயிரிழந்தவர்களின் உடல்களை பெறுவோம். அதுவரை அறவழியில் போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

x