கர்நாடகாவில் அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!


கர்நாடகாவில் 13 வயதான இளம் மல்யுத்த வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா நகரில் உள்ள சிபரா சர்கிள் பகுதியை சேர்ந்தவர் காவ்யா பூஜார். கர்நாடக மாநிலம் தார்வாரில் உள்ள மல்யுத்த பயிற்சி விடுதியில் தங்கியிருந்தபடியே பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் காவ்யா பூஜார் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்

நேற்று காலை வழக்கம் போல பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்ற காவ்யா, பின்னர் ஒரு அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வீராங்கனையின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவ்யாவின் அறையை சோதனையிட்டதில், தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதம் எதையும் காவ்யா எழுதி வைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். காவ்யா பூஜாரின் குடும்பத்தினர் அனைவருமே பிரபல மல்யுத்த வீரர்களாக இருப்பதால், மல்யுத்தம் தொடர்பான அழுத்தம் காரணமாக காவ்யா பூஜார் தற்கொலைச் செய்திருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார், இதுத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x