மதுரை: மதுரை அருகே குடும்பப் பிரச்சினை குறித்து விசாரிக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாட்டுத்தாவணி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் நத்தர் ஒலி நேற்று முன்தினம் இரவு உத்தங்குடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உத்தங்குடி பாண்டியன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தகராறு நடப்பதாகவும், அதை விசாரிக்குமாறும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு நத்தர் ஒலி சென்றார். அங்குசங்கையா (35) என்பவர் பிரச்சினையில் ஈடுபட்டிருந்தார். அவர் தனது தாயார் கண்ணாமணியிடம், தன்னைவிட்டுப் பிரிந்து ராமநாதபுரம் சென்றுவிட்ட மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென கண்ணாமணியை அரிவாளால் வெட்ட சங்கையா முயன்றுள்ளார். அவரை உதவி ஆய்வாளர் நத்தர்ஒலி தடுத்தார். அப்போது, உதவிஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் காயமடைந்த உதவிஆய்வாளர் நத்தர் ஒலி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்து மாட்டுத்தாவணி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சங்கையாவை கைது செய்தனர்