போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த தமிழக சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் கைது @ புதுச்சேரி


திலீபன் பயன்படுத்திய போலி அடையாள அட்டை

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல் கேட் பகுதியில் தமிழக போலீஸார் கடந்த மே மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மினிலோடு கேரியர் வண்டியை மடக்கி சோதனை செய்தபோது அதில் போலி மதுபாட்டில்கள் பல பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் மதுபாட்டில் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் புதுச்சேரி அரும்பார்த்தப்புரம் சக்திவேல் (42) உள்ளிட்ட 6 பேர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள உளவாய்க்கால் கிராமம் வெற்றிவேலன் நகரில் நடமாடும் போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து தமிழக சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் மதுவிலக்கு போலீஸார் உளவாயக்கால் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினிலோடு கேரியர் மற்றும் லாரியை சோதனை செய்தனர்.

அப்போது அதில், சாராய கேன்கள், போலி ஹாலோ கிராம் ஸ்டிக்கர், மது தயாரிக்கும் மூலப்பொருட்கள், மதுபாட்டில் தயார் செய்து சீலிங் செய்யும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் தமிழக போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். புதுச்சேரி பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வில்லியனூர் எஸ்பி-யான வம்சிதரெட்டி உத்தரவிட்டார். அதன்பேரில் புதுச்சேரி வில்லியனூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், உளவாய்க்கால் கிராமத்தில் போலி மதுபாட்டில்கள் சிக்கிய வழக்கில் தொடர்புடைய சக்திவேலின் உறவினர் வீடு உள்ளதால், அவர்கள் துணையுடன் வாகனங்களை இங்கு கொண்டுவந்து நிறுத்தி, இரவு நேரங்களில் போலி மதுபாட்டில்கள் தயார் செய்தது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி போலீஸார் சக்திவேல் உறவினர் உள்ளிட்ட வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா என விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனிடையே, உளவாய்க்கால் பகுதியில் ஆரோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவரது மகன் திலீபன். வழக்கில் சிக்கிய சக்திவேலின் உறவினர் ரமேஷ் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்துவதை அறிந்து, அவரிடம், தான் தமிழகத்தில் காவலராக இருப்பதாகவும், இந்த வழக்கில் நீங்கள் சிக்காமல் இருக்க ரூ.1 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்கில் சிக்கவைத்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ரமேஷ் ரூ.90 ஆயிரம் பணத்தை திலீபனிடன் கொடுத்துள்ளார். ஆனாலும் மீண்டும் திலீபன், ரமேஷிடம் ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ரமேஷ், இது தொடர்பாக ஏற்கெனவே வில்லியனூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர்களிடம் ரமேஷ் முறையிட்டுள்ளார். இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு திலீபனை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், திலீபன் தமிழக காவல் துறையில் காவலராக பணிபுரியவில்லை என்பதும், போலீஸ் எனக் கூறிக்கொண்டு காவலர் சீருடையில் போலி அடையாள அட்டை தயார் செய்து, போலீஸ் சீருடையுடன் சென்று பலரை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து திலீபனை கைது செய்த புதுச்சேரி போலீஸார், அவரிடம் இருந்து போலி போலீஸ் அடையாள அட்டை, ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனிடையே, விசாரணைக்குப் பின் திலீபனை போலீஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x