மகாராஷ்டிரா மாநிலத்தில் புறநகர் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பெட்டிகள் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நாராயண்பூர் ரயில் நிலையத்தை நோக்கி புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆஸ்தி ரயில் நிலையம் அருகே வந்த போது, ரயிலின் பிரேக் வேனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ அடுத்தடுத்து 4 பெட்டிகளுக்கு பரவியதை அடுத்து, ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீவிபத்து காரணமாக ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு நிலவியது.