நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை


சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர்.

முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக இந்த நிதி நிறுவனம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடுசெய்தவர்களின் சுமார் ரூ.525கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.

மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.

அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், புதுக்கோட்டையில் உள்ள கட்டியா வயல் என்ற பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை கண்டனம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.

தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைஅச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது

x