சென்னை: தலைமைக் காவலர்கள் இருவரை பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடியை பெண் காவல் ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை பெரம்பூரில் கடந்த மாதம்5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னையில் ரவுடிகள் ஒழிப்புப் பணியைசென்னை காவல் ஆணையர் அருண் முடுக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய ரவுடியான சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரோகித் ராஜை (34) தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அவர் கீழ்ப்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கி இருப்பதாக உதவி ஆய்வாளர் கலைச்செல்விக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தலைமைக் காவலர்கள் சரவண குமார், பிரதீப் ஆகியோருடன் நேற்று அதிகாலை சம்பவ இடம்விரைந்து ரவுடியைக் கைது செய்யும்முயற்சியில் ஈடுபட்டார். ரோகித் ராஜ்,அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து கைது செய்ய வந்த தலைமைக் காவலர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கினார்.
இதில், அவர்கள் இருவரும் காயம்அடைந்தனர். மேலும், உதவி ஆய்வாளர் கலைச்செல்வியையும் தாக்க பாய்ந்துள்ளார். இதையடுத்து, அவரை எச்சரிக்கை செய்யும் விதமாக, தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் அதைப் பொருட்படுத்தாது, உதவி ஆய்வாளரை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் கலைச்செல்வி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், வலது காலில் காயம் அடைந்த ரோகித் ராஜ் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.
தகவல் அறிந்து டி.பி.சத்திரம் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரவுடி ரோகித் ராஜ் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரவுடியை துணிச்சலாக சுட்டுப் பிடித்த பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை, சென்னை காவல் ஆணையர் அருண் நேற்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி அளித்தார். ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச்சேர்ந்தவர். எம்.ஏ. ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற இவர் 2011-ம் ஆண்டில் நேரடி எஸ்.ஐ.யாக பணிக்குச் சேர்ந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர்தான் டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அடுத்த சிலநாட்களிலேயே தலைமறைவாக இருந்த ரவுடியை சுட்டு பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி ரோகித் ராஜ் மீது 3 கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. டி.பி.சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்2017-ல் ரவுடி தீச்சட்டி முருகன் கொலை வழக்கு, 2021-ல் அசோக் நகரில் பிரபலரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலைவழக்கு, அமைந்தகரையில் 2022-ம் ஆண்டு பைனான்சியர் ஆறுமுகம் கொலை வழக்கு ஆகியவை இவர் மீதுஉள்ளன. இந்த வழக்குகளில் அவருக்குபிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொலை செய்ய கூலிப்படைகளை அனுப்புவது, மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் இவர் திரை மறைவில் செயல்பட்டு வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.