தென்காசி அருகே இளைஞr சரமாரியாக வெட்டிக் கொலை!


கோப்புப் படம்

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே இளைஞர் ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தைச் சேர்ந்த கடல்மணி என்பவரது மகன் பார்த்திபன் (24). இவர், பாவூர்சத்திரம் காய்கறி சந்தையில் சரக்கு வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு முத்துகிருஷ்ணபேரி கிராமத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் பார்த்திபன் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, வட்டாலூர் அருகே பார்த்திபனை வழிமறித்த ஒரு கும்பல், அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பார்த்திபனை கொலை செய்ததாகக் கூறி வட்டாலூர் பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான பாஸ்கர் என்பவர் இன்று காலையில் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீஸார், கொலையில் தொடர்புடைய மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொலை வழக்கில் பாஸ்கர் கைது செய்யப்பட்ட தகவலறிந்த அவரது தாயார் செல்வி, ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து தகவலறிந்த ஆலங்குளம் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று, அவரை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

x