விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்த நிலையில் அவர் தவறான சிகிச்சையால்தான் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் பொய்யப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி அய்யப்பன். இவரது மகள் அருகிலுள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக முண்டியம்பாக்கதில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அப்போது, மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவியின் கல்லீரல், கணையம் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை தொடங்கியுள்ளனர். நேற்று மாணவியின் கழுத்தில் மருத்துவர்கள் ஊசி ஒன்றை செலுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் கழுத்தில் ஊசி செலுத்த வேண்டும்? அதனால் தான் மாணவி உயிரிழந்து விட்டார் என்று மருத்துவமனையைக் குற்றம் சாட்டினர். தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்து விட்டதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து சென்னை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட சென்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி சுரேஷ் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக புகார் அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென எஸ்.பி உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர்.
மாணவி உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சைதான் காரணம் எனவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!