புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளவிடுதியைச் சேர்ந்தவர் வீரன் மகன் சீனியப்பா (58). துவார் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 2021 நவம்பர் மாதம் அப்பள்ளியின் 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் சசி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த ஆலங்குடி மகளிர் காவல் நிலைய போலீஸார் அந்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளி சீனியப்பாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.