சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்கு, பறக்கும் அணில்கள், ஆமைகள், மலைப் பாம்புகள் பறிமுதல்


சென்னை: சென்னை விமான நிலையத்தில் அரிய வகை குரங்கு, அணில்கள், ஆமைகள், மலைப்பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த சென்னையைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது, சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு வந்த சென்னையை சேர்ந்த முகமது மீரா சர்தாரளி என்ற ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்த போது, அரிய வகைகளை சேர்ந்த 16 ஆமைகள், பைத்தான் வகையை சேர்ந்த 3 மலைப்பாம்புகள், 2 அரிய பறக்கும் அணில், ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்கு என மொத்தம் அரிய வகை அணில் என மொத்தம் 22 எண்ணிக்கையில் இருந்தன.

தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகள், வட அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படும் இந்த உயிரினங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியை தனி அறையில் அடைத்து வைத்துவிட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, அபூர்வ வகை அபாயகரமான உயிரினங்களை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சென்னையில் உள்ள ஒருவர் இந்த உயிரினங்களை கடத்தி வர சொன்னதாகவும், அவரிடம் கொடுப்பதற்காக தான் கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அந்த பயணியை அழைத்து கொண்டு வடசென்னை பகுதியில் உள்ள அவர் கூறிய நபரின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு இருந்த சில அபூர்வ வகை உயிரினங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பயணியிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட உயிரினங்களை தாய்லாந்துக்கு திரும்பி அனுப்ப முடிவு செய்துள்ள அதிகாரிகள், அதற்கான முழு செலவையும் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வசூலித்தனர்.

x