மேற்கு மண்டலத்தில் கைப்பற்றப்பட்ட 344 கிலோ கஞ்சா அழிப்பு


கோவை செட்டிபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தீயிட்டு அழிக்கும் பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்.

கோவை: மேற்கு மண்டலங்களில் கைப்பற்றப்பட்ட 344 கிலோ 138 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் இன்று (ஆக.12) அழித்தனர்.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மேற்கு மண்டல காவல்துறையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் , தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. ஐஜி தலைமையில் மேற்கு மண்டல காவல்துறையும், காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மாவட்ட காவல்துறையும் இயங்கி வருகிறது. அதேபோல், கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மூன்று மாநகர காவல்துறைகள் உள்ளன. இவை தலா ஐஜி அந்தஸ்தினால் ஆன ஆணையர்கள் தலைமையில் இயங்கி வருகின்றன. மேற்கு மண்டல மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட காவல் எல்லைகளில் கடந்தாண்டு இறுதி மற்றும் நடப்பாண்டில் 344 கிலோ 138 கிராம் கஞ்சாவினை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை போலீஸார் இன்று (ஆக.12) அழிக்கும் பணியை மேற்கொண்டனர். கோவை செட்டிபாளையத்தில் உள்ள, ஒரு தனியார் கழிவுகள் அழிக்கும் கூடத்துக்கு, அந்தந்த மாவட்ட, மாநகர காவல்துறையினர் தாங்கள் பறிமுதல் செய்த கஞ்சாவை மூட்டைகளாக எடுத்து வந்தனர். கோவை சரக டிஐஜி சரவண சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோரது மேற்பார்வையில் மேற்கண்ட 344 கிலோ கஞ்சா, நவீன இயந்திரத்தில் போட்டு தீயிட்டு அழித்தனர். அதன் பின்னர், போலீஸார் அனைவரும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.

x