மும்பை விமான நிலைய ஓடுதளத்தில் விமான பயணிகள் அமர்ந்து உணவருந்திய சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வட மாநிலங்களில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் விமானங்கள் ஓடுதளத்தில் இறங்குவதிலும், கிளம்புவதிலும் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் பயணிகளுக்கும் விமான நிறுவனப் பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து கோவா செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாக கிளம்பாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் விமானியைத் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதே விமானம் கோவாவில் இருந்து டெல்லி சென்றபோது, அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறங்கிய போது, ஓடுதளத்திற்கு அருகில் உள்ள விமானங்கள் நிறுத்தும் இடமான டார்மாக் பகுதியில் அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர்.
இந்த காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியானதை அடுத்து இந்த சம்பவம் குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் ஆகியவை விளக்கம் அளித்து இருந்தன. கடும் பனிமூட்டம் காரணமாக அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், மும்பைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர். தொடர்ந்து ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்படும் டார்மாக் பகுதியில் அமர்ந்து தாங்கள் வைத்திருந்த உணவு வகைகளை சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முயற்சித்ததாகவும், ஆனால் அது தோல்வியைத் தழுவியதாகவும் விமான நிலைய செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனிடையே மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதால் மும்பையில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக தங்கள் பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, மும்பை விமான நிலைய நிர்வாகம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு களமிறங்கிய அமைச்சர்; அதிர்ந்த தொண்டர்கள்
தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
பிக் பாஸ்7 முடிவில் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ்!
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம்!
இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்... பனிமூட்டத்தால் 17 விமானங்கள் ரத்து!