மதுரையில் கைப்பற்றப்பட்ட 1,700 கிலோ கஞ்சா அழிப்பு


மதுரை: மதுரை நகரில் கைப்பற்றிய சுமார் 1,700 கிலோ கஞ்சா, நெல்லை அருகே வைத்து அழிக்கப்பட்டது.

மதுரை மாநகரில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே குட்கா, புகையிலை விற்போர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், நகரில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா குறிப்பிட்ட நாளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின்பேரில், அழிக்கப்படுவது வழக்கம். இதன்படி, மாநகரில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றிய சுமார் 1700 கிலோ கஞ்சாவை அழிக்க, நீதிமன்ற உத்தரவு பெற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவின் பேரில்,மாநகர் குற்றப் பதிவேடு பிரிவு காவல் உதவி ஆணையர் ஜெயராமன், திருநகர் காவல் ஆய்வாளர் துரைப் பாண்டியன், எஸ்எஸ்.காலனி காவல் ஆய்வாளர் காசி ஆகியோர் மூலமாக நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகிலுள்ள பொத்தையாபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு போதைப்பொருள் ஒழிப்புக்குழு முன்னிலையில் 1700 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது என மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

x