நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!


சிறப்பு எஸ்.ஐ., ஹெல்மெட் திருடியதாக வீடியோ வெளியாகி, வைரலான நிலையில், "ஹெல்மெட் திருடியது நான் இல்லை. மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பொய்யானது" என்று சிறப்பு எஸ்ஐ வேதனையுடன் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள பிரபல அசோகா ஓட்டலில் கடந்த 10ம் தேதி சாப்பிட வந்த சத்திய நாராயணன் என்பவர் ஓட்டல் பார்க்கிங்கில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து பார்த்தபோது அதில் இருந்த ஹெல்மெட் திருடு போனது தெரியவந்தது. ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீஸ் எஸ்ஐ சீருடையில் வந்த நபர் ஒருவர் ஹெல்மெட்டை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

இதைத் தொடர்ந்து சத்திய நாராயணன் காவல்துறையின் முகநூல் பக்கத்தில் அந்த சிசிடிவி காட்சிகளை பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து எழும்பூர் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, எழும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விஜயன் என்பவர் தான் ஹெல்மெட்டை திருடிச் சென்றதாக சமூக வலைதளங்களில் சிலர் செய்திகளைப் பரப்பினார்கள். இது செய்திச் சேனல்களிலும் ஒளிபரப்பானது. செய்தியாகவும் வெளியானது.

இந்த நிலையில், எஸ்.ஐ விஜயன் வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில், "நான் எழும்பூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கிறேன. என் பெயர் விஜயன். அக்டோபர் மாதம் 10ம் தேதி அன்று, அசோகா ஓட்டலில் நான் ஹெல்மெட் திருடியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அது நான் இல்லை. சரியாக விசாரிக்காமல் தவறான தகவலை அளித்து என் காவல் பணிக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.

என் மகன் திருமணத்திற்கு, அதிகாரியிடம் அனுமதிபெற்று, நான் முப்பது நாட்கள் விடுப்பு எடுத்துள்ளேன். ஊரிலேயே இல்லாத நான் எப்படி திருட்டில் ஈடுபட்ட முடியும். அவமானமாக உள்ளது. ஹெல்மெட் திருடிய நபர் யார் என தெரிந்தால் குரூப்பில் பதிவிடுங்கள். 26 ஆண்டுகால பணியில் எந்தவித தவறும் செய்யவில்லை. தற்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையில் உள்ளேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

விஜயன் விவகாரத்தில், உண்மையான குற்றவாளி யார், விசாரணையில் குளறுபடி நடந்ததா? என உயர் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சக காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x