சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சமாஜ்வாதி கட்சி நிர்வாகி போக்சோவில் கைது


உத்தரபிரதேசம்: கன்னோஜ் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக, சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகி நவாப் சிங் யாதவ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதர் கோட்வாலி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயதான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தொகுதி தலைவர் நவாப் சிங் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய கன்னோஜ் காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த், “இன்று அதிகாலை 1.30 மணியளவில் போலீஸின் அவசர உதவி எண்ணான 112-க்கு ஒரு அழைப்பு வந்தது. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதாக ஒரு சிறுமி தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டதுடன், நவாப் யாதவை கைது செய்தனர்.

வேலைக்காக நவாப் இல்லத்துக்கு அந்த சிறுமி தனது அத்தையுடன் வந்துள்ளார். அவரை பாலியல் வன்கொடுமை செய்ய நவாப் முயற்சித்துள்ளார். அந்த சிறுமிக்கு 15 வயது இருக்கும். புதிய குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

நவாப் சிங் யாதவ், கன்னோஜ் எம்.பி.யும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. மேலும், நவாப் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

x