சுவரில் துளையிட்டு அடகுக் கடையில் 50 சவரன் தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை @கூடுவாஞ்சேரி


கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் அடகுக் கடையின் பக்கத்துக் கடை சுவரைத் துளையிட்டு 50 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுவாஞ்சேரி பெருமாட்டுநல்லூர் தங்கமாபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம் (54). இவர் பாண்டூர் - நெல்லிக்குப்பம் சாலையில் ஐஸ்வர்யா பேங்கர்ஸ் என்ற பெயரில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு பக்கத்தில் கட்டிட உரிமையாளரான பூபதி (50) என்பவர் ஜூஸ் கடை வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை ஜூஸ் கடையை அதன் உரிமையாளர் பூபதி வழக்கம் போல் திறந்தபோது ஜூஸ் கடைக்கும் பக்கத்தில் உள்ள அடகு கடைக்கும் இடையே உள்ள சுவரில் துளையிட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜூஸ் கடையின் பின்புறத்தில் உள்ள இரும்பு ஷட்டர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்தபடி அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதில், 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தாம்பரம் மாநகர காவல் விரல் ரேகை பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடையில் சிசிடிவி கேமரா இல்லாததனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நகைக் கடையின் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

x