மூத்த மகன் இறப்பால் வேதனை: இளைய மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பெற்றோர்


விஷம்

ஶ்ரீரங்கத்தில் மகன் இறந்த துக்கத்தில் இருந்த பெற்றோர் மனநலம் பாதித்த தங்கள் இளைய மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியைச் சோந்தவர் மோகன் (70). இவரது மனைவி சிவகாமி (65). இவர்களுக்கு செந்தில்குமார் (39), தினேஷ் (36) ஆகிய இருமகன்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் பெற்றோர் பெரும் மன வேதனையில் இருந்து வந்தனர். இதைத்தொடர்ந்து, இளையமகன் தினேஷுக்கு மனநலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் மேலும் விரக்தி அடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மோகன், அவரது மனைவி சிவகாமி ஆகியோர் மகன் தினேஷுக்கு விஷத்தை கொடுத்து விட்டு, அதன்பின்னர் தாங்களும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.

விஷம்

நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது, மூன்று பேரும் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்துத் தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினர் அங்கு வந்து மூன்று பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி தினேஷ் உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

x