கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பேன்: போலீஸாருக்கு மம்தா பானர்ஜி கெடு


கொல்கத்தா: ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் கடந்த வாரம் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் இருக்கும் என்றும், தவறினால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பேன் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி, '' இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமைக்குள் கைது செய்யாவிட்டால், வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்போம். சிபிஐ-யின் வழக்குகளின் வெற்றி விகிதம் குறைவாக இருந்தாலும் நாங்கள் ஒப்படைப்போம். ஏனென்றால் ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு திருட்டு போன்ற சிபிஐ எடுத்த வழக்குகளில் இதுவரை நீதி கிடைக்கவில்லை" என தெரிவித்தார்.

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர்.

அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி டீன் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக, மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்தக் கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x