3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எல்டிடிஇ ஆதரவாளர் கைது: என்.ஐ.ஏ. நடவடிக்கை


சென்னை: மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் 13 பேர், இலங்கையில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருவில் சட்ட விரோதமாக நுழைந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழக பகுதிக்கு வந்து, பின்னர் ரயில், பேருந்து, இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலமாக இவர்கள் மங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதை அந்த மாநில போலீஸார் கண்டுபிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த சீனி ஆபுல்கான் என்பவர் உட்பட சிலர்கூட்டு சேர்ந்து அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 10 பேர் மீது மங்களூரூ போலீஸார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இவர்களில் 3 பேர் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை அமைத்து கர்நாடக போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதே ஆண்டில் (2021) என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சட்ட விரோதமாக இலங்கை தமிழர்களை கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இதுபற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் ஆள்கடத்தலின் பின்னணி பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

இலங்கையில் இருந்து 38 தமிழர்களை கனடாவில் சட்ட விரோதமாக குடியேற வைப்பதாகவும், அங்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியும்,அதற்கான போலி ஆவணங்களை ஆள் கடத்தல் கும்பல்தயாரித்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக 10 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த 3 பேரில் சீனி ஆபுல்கான் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டார். இவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளராக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.

x