அதிர்ச்சி... தூங்கும்போது இரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை


விபத்தில் சிக்கிய சந்துரு, பழனிசாமி, வேலுச்சாமி

திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டை அருகே உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் சந்துரு(27). தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் வீட்டிற்கு, இவரது உறவினர்களான திருப்பூர் மாவட்டம், உருதுமலைப்பட்டியை சேர்ந்த 57 பழனிசாமி மற்றும் தண்டிக்காரபாளையத்தைச் சேர்ந்த 66 வயதான வேலுச்சாமி ஆகியோர் செவ்வாய்கிழமை வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு, 3 பேரும் சந்துருவின் வீட்டில் தூங்கியுள்ளனர். தூங்கும்போது, சந்துரு தனது செல்போனை அருகில் உள்ள ‘பிளக் போர்டில்’ சார்ஜ் போட்டுவிட்டு படுத்துள்ளார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நேற்று காலை சார்ஜில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. அப்போது, செல்போனில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகில் தூங்கி கொண்டிருந்த சந்துரு மற்றும் அவரது உறவினர்களின் மீது பட்டு, அவர்களது உடைகளில் தீப் பற்றியது. இதனால், அவர்கள் மூன்று பேரும் அலறி துடித்தனர். இந்த சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், சந்துருவின் வீட்டிற்கு ஓடி வந்து பார்த்துள்ளனர். அங்கு சந்துரு, பழனிசாமி, வேலுச்சாமி ஆகியோர் மீது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இதனால், அவர்கள் உடனடியாக அருகே இருந்த போர்வையால் தீயை அணைத்து, 3 பேரையும் சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில், சந்துரு செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால், மின்னழுத்தம் அதிகமாகி செல்போன் வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x