தாம்பரம்: தாம்பரம் அருகே படப்பையில் வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.5 லட்சம் பணத்தையும், 2 பவுன் தங்க நகையையும் பட்டப்பகலில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம் அருகே படப்பை ஆதனஞ்சேரி அண்ணா நகரை சேர்ந்தவர் இஸ்மாயில் (38). வாடகைக்கு கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இன்று காலை 11:30 மணியளவில் படப்பையில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.1,50,000 பணம் எடுத்த இஸ்மாயில் அங்கிருந்து மீட்ட 2 சவரன் நகையையும், தனது இருசக்கர வாகனத்தினுள் வைத்துகொண்டு வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார்.
ஆத்தனஞ்சேரி நாகாத்தம்மன் கோயில் தெருவில் அவர் வசித்து வந்த வீட்டின் பின்புறம், வாகனத்தை நிறுத்தி விட்டு அருகே உள்ள மளிகை கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது வாகனத்தில் இருந்த பணமும் நகையும் திருடு போனது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தததில், இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்து செல்வது பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, வங்கியில் பணம் எடுத்து வருவோரை கண்காணித்து, பணத்தை திருடும் கும்பல் படப்பை பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.