புதுச்சேரி: கனடாவில் இருந்து பாகூர் குடியிருப்புபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த பல் மருத்துவரின் தங்க நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்துள்ள குடியிருப்புபாளையம் வலம்புரி விநாயகர் நகரை சேர்ந்தவர் ரஷ்யா(62). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் கலிபோர்னியா (45). கனடாவில் பல் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியா, தன் மகனுடன் கனடாவில் இருந்து பாகூர் குடியிருப்புபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு விடுமுறைக்காக வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 8-ம் தேதி தாய் ரஷ்யா உள்ளிட்ட அனைவருடனும் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் இரும்பு கேட், கதவு உள்ளிட்டவைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்தபோது, மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொட்கள் திருடப்பட்டிருந்தது.
மேலும் கலிபோர்னியா, அவரது மகனுக்கு சொந்தமான இரண்டரை லட்சம் மதிப்புள்ள 2 லேப்டாப்கள் மற்றும் ஒரு விலை உயர்ந்த டேப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து பாகூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் திருட்டு குறித்து இன்று புகாரை பெற்ற பாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் இருந்த கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயின் மற்றும வெள்ளி பொருட்கள், கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.தற்போது கனடாவில் இருந்து தாய் வீட்டுக்கு வந்த பல் மருத்துவர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ''போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' எனவும் வலியுறுத்தியுள்ளனர்.