திருவள்ளூர்: திருவள்ளூரில் கணவருடன் நட்பு வைத்திருந்த பெண்ணை தீவைத்து கொல்ல முயற்சி செய்து தொடர்பாக, மனைவி உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பார்வதி (36). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு, ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். சுரேஷ் திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை நடத்தி வருகிறார். திருவள்ளூர் கம்பர் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீடான புல்லரம்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சுரேஷுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் புட்லூர் அம்மன் கோயிலில் ராஜேஸ்வரியை சுரேஷ் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது இதையறிந்த சுரேஷின் மனைவி பார்வதி, ராஜேஸ்வரியிடம் சென்று தனது கணவரின் காய்கறி கடைக்கு வரக்கூடாது என தகராறு செய்து அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 4 மாதங்கள் கழித்து ராஜேஸ்வரி, சுரேஷின் காய்கறி கடைக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷின் மனைவி பார்வதி கடைக்கு வந்து ராஜேஸ்வரியிடம் தகறாறு செய்துள்ளார்.
அப்போது, பார்வதி தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ராஜேஸ்வரியின் மீது ஊற்றியுள்ளார். கடையில் இருந்த விளக்கில் இருந்து தீ பரவி ராஜேஸ்வரிக்கு தீக்காயம் ஏற்பட்டது. முதலில் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலத்தில், ‘புல்லரம்பாக்கத்தில் உள்ள எனது தாய் வீட்டில் இருந்தபோது சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம். சுரேஷின் முதல் மனைவி பார்வதி அவரைப் பிரிந்து இருந்ததால் நாங்கள் திருமணம் செய்து கொண்டு குமணன் சாவடியில் வசித்து வந்தோம்.
நேற்று நான் கடைக்கு வந்ததை அறிந்த பார்வதி கடைக்கு வந்து பெட்ரோல் ஊற்றி என்னை கொல்ல முயற்சி செய்தார். அவருக்கு உடந்தையாக அவரது உறவினர்கள் விஜயா, மோகன், முரளி,நதியா, லட்சுமி, சங்கர் ஆகியோர் செயல்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சுரேஷின் மனைவி பார்வதி உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.