கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை - பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்


மேற்கு வங்கம்: கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்து கிடந்த முதுகலை பயிற்சி மருத்துவரின், முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கொல்லப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்த பெண் மருத்துவர் கடந்த வியாழக்கிழமை இரவு பணியில் இருந்தார். இந்த சூழலில் அவர் நேற்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும் முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில், சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். "நாங்கள் ஒருவரை கைது செய்துள்ளோம். அவரது நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியது, மேலும் அவர் நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது" என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு மருத்துவர்களிடம் போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, அவரின் அந்தரங்க பாகங்களில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், ‘ பயிற்சி மருத்துவரின் கண்கள் மற்றும் வாய் இரண்டிலிருந்தும் இரத்தம் கசிந்தது. முகத்தில் காயங்கள் மற்றும் ஒரு நகத்தில் காயம் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளிலும் இரத்தம் கசிந்தது. அவரது உதடு, வயிறு, இடது கால், கழுத்து, வலது கை, மோதிர விரல் ஆகியவற்றிலும் காயங்கள் உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா காவல்துறையின் தகவல்களின்படி, ‘இந்த சம்பவம் அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் நடந்துள்ளது. அவருடைய கழுத்து எலும்பும் உடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றதாக தெரிகிறது. பிரேத பரிசோதனையின் முழு அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இது குற்றவாளிகளை அடையாளம் காண உதவும்" என்று அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முதல்வர் மம்தா பானர்ஜி பெற்றோரை அழைத்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டதாகவும், தேவைப்பட்டால் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

x