கரூர் அருகே சாலையில் நடந்து சென்ற தலைமைக் காவலரை அரிவாளால் வெட்ட வந்த நபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற நுண்ணறிவு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் செந்தில் குமார் (38). இவர் சீருடை அணியாமல் நேற்று இரவு 9 மணியளவில் சொந்த வேலை காரணமாக காமராஜ் மார்க்கெட் அருகில் உள்ள ரத்தினம் சாலைக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு இறங்கிய போது, அவருக்குச் செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனால் செல்போனில் பேசிக் கொண்டு ரத்தினம் சாலையில் சிறிது தூரம் அவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்த நபர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளார். இதைக்கண்டு, சுதாரித்துக் கொண்ட தலைமைக் காவலர் செந்தில் அரிவாளைப் பிடுங்க முற்பட்டார். அப்போது, அவரது இடது கை விரலில் வெட்டு விழுந்தது. ஆனாலும், செந்தில் குமார், அந்த நபரைக் கீழே தள்ளிவிட்டு அரிவாளைப் பிடுங்கினார்.
இதையடுத்து, அந்த நபரை அங்கேயே உட்கார வைத்து விட்டு நகர போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர காவல் நிலைய போலீஸார், அவரிடமிருந்த அரிவாளைப் பறிமுதல் செய்தனர்.
மது போதையிலிருந்த அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அரிவாள் வெட்டு விழுந்த தலைமைக் காவலர் செந்தில் குமாரிடமும், அங்கிருந்த பொது மக்களிடமும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அரிவாளுடன் வந்த நபர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போதையில் இருந்த அந்த நபரே போலீஸாரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அவர் ஏன் செந்தில்குமாரை வெட்ட வந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் நெல்லை வரை பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
‘இந்தியாவின் 4 சங்கராச்சாரியார்களும், ராமர் கோயில் விழாவை புறக்கணித்திருக்கிறார்கள்’