ஸ்ரீமுஷ்ணம் அருகே பணிக்குச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் மீது ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார் பேட்டை சேர்ந்தவர் பழனிவேல்(49). இவர் விருத்தாசலம் பேருந்து பணிமனை எண்.2-ல் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் விருத்தாசலத்தில் உள்ள 2 பேருந்து பணிமனைகளில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
மேலும், தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விருத்தாசலத்தில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்தினை பழனிவேல் பணிமனையில் இருந்து எடுத்துக்கொண்டு விருத்தாசலம் பேருந்து நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, விருத்தாசலம் எல்ஐசி அலுவலகம் அருகே அந்த பேருந்தினை மாற்று ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
அப்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள், பழனிவேல், பேருந்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கண்ணுசாமி, ராஜ் என்ற இரண்டு பேர் பழனிவேலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், பழனிவேல் அங்கேயே மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸார், விரைந்து சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு பேருந்தை இயக்க காரணமாக இருந்த ஓட்டுநர் பழனிவேலுவை ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.