மன்னார்குடி அருகே இந்திய கம்யூ. முன்னாள் நிர்வாகி கொலை: திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழியா என விசாரணை


மாரிமுத்து

திருவாரூர்: மன்னார்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான இவர், பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள நடுவகளப்பால் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த இவர், பின்னர் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் களப்பால் கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

இதனிடையே, கோவையிலிருந்து களப்பால் பகுதிக்கு வந்து குடியேறிய பாஸ்கர்(48) என்பவர் திமுகவில் இணைந்து, அரசியல் ரீதியாக வளர்ந்தார். மேலும், அப்பகுதி மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது, பொருளுதவி செய்வது போன்றவற்றை செய்துவந்தார்.

இவரது வளர்ச்சியை உள்ளூர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 2013 ஜூலையில் பாஸ்கரை ஒரு கும்பல் கொலை செய்தது. இது தொடர்பாக களப்பால் போலீஸார் வழக்குபதிவு செய்து, மாரிமுத்து உள்ளிட்டோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் 2 பேர் பிறழ்சாட்சி சொன்னதால், மாரிமுத்து உள்ளிட்ட அனைவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், களப்பால் கடைவீதியில் நேற்று மாரிமுத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்தபடி வந்த 3 பேர் மாரிமுத்துவை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனர். இதில் பலத்தகாயமடைந்த மாரிமுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த களப்பால் போலீஸார் மாரிமுத்துவின் உடலைமீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருவாரூர் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், முத்துப்பேட்டை டிஎஸ்பிராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

திமுக பிரமுகர் பாஸ்கர் கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நிகழ்ந்ததா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாரிமுத்துவை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி,மன்னார்குடி அரசு மருத்துவமனையின் முன் மாரிமுத்துவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

கம்யூனிஸ்ட் விளக்கம்: கொலை செய்யப்பட்ட மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றும், அவருடன் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொண்டது இல்லை என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

x