உத்தரப்பிரதேசத்தில் 16 கிராமங்களில் வசிப்பவர்களின் கணக்கில் இருந்து ரூ.4 கோடியை போஸ்ட் மாஸ்டர் மோசடி செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள அவுகௌதா தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் ஓம்பிரகாஷ் ஷக்யா. இவர் வேலை செய்யும் தபால் நிலையத்தில் 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணத்தை சேமிப்பு கணக்கில் வரவு வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், இப்படி 16 கிராம மக்கள் சேமித்து வைத்தவர்கள் தங்களுடைய பணத்தை திரும்பப் பெறுவதற்காக தபால் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவுகௌதா போலீஸில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அப்போது 16 கிராம மக்களின் 4 கோடி ரூபாயை போஸ்ட் மாஸ்டரான ஓம்பிரகாஷ் ஷக்யா மோசடி செய்தது தெரிய வந்தது.
அவர் மீது . இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 409, 420 மற்றும் 120-பி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஷக்யாவைப் பிடிக்க காவல்துறையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மோசடி குறித்து விசாரணைக்கு தபால் துறை உத்தரவிட்டுள்ளது. அலட்சியமாக இருந்ததாக அவுகௌதா தபால் நிலையத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.