தஞ்சையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 117 கிலோ கஞ்சா பறிமுதல் - சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் கைது


தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 117 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட போக்சோ வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் அவரது நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த உள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று இரவு (வியாழக்கிழமை) வண்டிப்பேட்டை பகுதியில், அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் அபிராமி, காவலர்கள் ராஜா, பிரபு ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து போலீஸார் சோதனை செய்தனர். அந்தக் காரில் மூட்டை மூட்டையாக 117 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்து, காரில் வந்த இருவரையும் அதிராம்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, போலீஸார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் ராஜபாண்டியன் (33) மற்றும் அவரது நண்பர் திருவப்பூர் பகுதியைச் சேர்ந்த தவமணி (26) என்பது தெரியவந்தது.

இதில், சங்கர் ராஜபாண்டியன் போக்சோ வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து போலீஸாராக பணியாற்றிய சங்கர் ராஜபாண்டியன், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, முக்கொம்பு அணைப் பகுதியில் நான்கு போலீஸாருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது 17 வயது சிறுமி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவரை விசாரிப்பதாக அழைத்துச் சென்ற சங்கர் ராஜபாண்டியன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பான புகாரில், சங்கர் ராஜபாண்டியன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணையில், சங்கர் ராஜபாண்டியன், தவமணி இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதிராம்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் உதவியோடு இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x