விழுப்புரத்தில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ரூ.7.60 லட்சம் பணம், நகை பறிப்பு: 10 பேர் கைது


பிரதிநிதித்துவப் படம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி துணிக்கடை உரிமையாளரை தாக்கி ரூ 7.60 லட்சம் பணம் மற்ற்ம் நகை பறிப்பில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ராயபுரத்தில் துணிக்கடை வைத்திருப்பவர் ஜபருல்லா மகன் முகமது இப்ராஹிம் (37). இவர் இந்தியா மார்ட் என்ற செயலி மூலம் மார்க்கெட் விலையை விட 7 சதவீதம் குறைவாக தங்கம் தருவதாக வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட பதிவை பார்த்துவிட்டு 5 நாட்களுக்கு முன்பு அப்பதிவில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தொலைபேசியில் பேசியவர்கள் அவரை செஞ்சி அருகே ஒரு இடத்தைச் சொல்லி அங்கு வர கூறியுள்ளனர். அதன்படி முகமது இப்ராஹிம் தனது நண்பர்களுடன் கடந்த 7ம் தேதி செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் வசிக்கும் ஜான் கென்னடி என்ற பரத் (36) மற்றும் அவரது நண்பர்களும் மாலையில் தங்கம் வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு தங்கம் வாங்க எங்கு செல்ல வேண்டும் என்று முகமது இப்ராஹிம் அவர்களிடம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜான் கென்னடி முகமது இப்ராஹிமையும் அவரது நண்பர்களையும் சத்தியமங்கலம் அருகே உள்ள சொக்கனந்தல் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்குப் பின்னால் வேறு ஒரு காரில் வந்த ஜான் கென்னடியின் நண்பர்கள் இப்ராஹிம் மற்றும் அவர்களது நண்பர்கள் வந்திருந்த காரை வழிமடக்கி கார் கண்ணாடியை உடைத்து அவர்கள் வைத்திருந்த ரூ 7.60 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க மோதிரம், 6 செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முகமது இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர்கள் முஸ்தபா (32) அக்பர் அலி (36), ஜாபர் அலி (21) டேவிட் (45) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜான் கென்னடி (36), திருப்பத்தூர் மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42), சிவநேசன் (45), சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த அலாவுதீன் (42), செஞ்சி அருகே வேலந்தாங்கலைச் சேர்ந்த ராஜேஷ் (37), செல்வகுமார் (30), ஆன்ட்ரூஸ் (32) தீவனூரைச் சேர்ந்த பரத் (26), புதுச்சேரி நோனாங்குப்பத்தைச் சேர்ந்த லோகு 35), முத்து (38) ஆகிய 10 பேரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

x