எஸ்.ஐ பரசுராம் வீட்டில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம்: கர்நாடகாவில் பரபரப்பு


சந்தேக ரீதியாக மரணமடைந்த யாதகிரி எஸ்.ஐ பரசுராம் வீட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ சென்னாரெட்டியின் முக்கிய ஆவணங்களை சிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ள விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், யாதகிரி சைபர் க்ரைம் ஸ்டேஷன் எஸ்.ஐ பரசுராம்(34) கடந்த 2- ம் தேதி இரவு வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ சென்னாரெட்டி பாட்டீல் மற்றும் அவரது மகன் பாம்பாகவுடா ஆகியோர்தான் காரணம் என பரசுராம் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதன் தொடர்ச்சியாக எம்எல்ஏ சென்னாரெட்டி பாட்டீல் மீது சாதி வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னாரெட்டி தலைமறைவாகியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிஐடி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சிஐடி அதிகாரிகள், போலீஸ் விடுதியில் உள்ள பரசுராம் வீட்டுக்குச் சென்று நேற்று மாலை சோதனையிட்டனர். அந்த வீட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ சென்னாரெட்டி பாட்டீல் பெயர் கொண்ட லெட்டர்ஹெட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறை சட்டம் ஒழுங்கு துறைக்கு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதால், தனக்கு குற்றப்பிரிவு பதவியை பெற்றுத்தருமாறு பரசுராம், எம்எல்ஏ சென்னாரெட்டியிடம் கேட்டிருந்தார். இந்த காரணத்திற்காக, காங்கிரஸ் எம்எல்ஏ சென்னாரெட்டி பாட்டீல், யாதகிரி நகர் காவல் நிலைய எஸ்.ஐ பதவிக்கு கடிதம் கொடுத்திருந்தார். இந்த லெட்டர்ஹெட் சிஐடி அதிகாரிகளால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாதகிரி நகர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ பதவிக்கு எம்எல்ஏ சென்னாரெட்டி ரூ.15 லட்சம். எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் எஸ்.ஐ பரசுராம் அதற்காக பணம் ஏற்பாடு செய்து வந்தார். இதற்காக வசூலிக்கப்பட்ட 7.33 லட்சம் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். மேலும் பரசுராமிற்குச் சொந்தமான 4 வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் குறித்த விவரங்களையும் சிஐடி அதிகாரிகள் பெற்றுள்ளனர். மேலும், துப்பாக்கி, சிம் கார்டு, செல்போன் மற்றும் வாக்கி டாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அத்துடன் பரசுராமன் இறந்த இடத்தில் இருந்து வாயில் இருந்து ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டது. இறந்த எஸ்.ஐ பரசுராமன் செல்போனில் தனக்கு வந்த அழைத்து அழைப்புகளையும் பதிவு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனையும் தற்போது சோதனை செய்து வருவதால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x