அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கவிஞர் ஒருவர் அவரது காதலியின் கண் முன்னே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர் ரியான் கார்சன் (32). கவிஞர் மற்றும் சமூக ஆர்வலரான இவர் கடந்த 2 ம் தேதி, அதிகாலை 4 மணியளவில் தன் காதலியுடன் கிரவுன் ஹைட்ஸ் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், இருவரும் எழுந்து நடந்து சென்றனர். அப்போது அவர்களை முந்தியபடி சென்ற இளைஞர் ஒருவர் திடீரென ரியானைத் தாக்கினார்.
அவர் அதிலிருந்து தப்பிக்க முயன்றபோது முகமூடி அணிந்த அந்த நபர், அவரை கத்தியால் குத்தினார். இதனால் அவர் சரிந்து கீழே விழுந்தார். அருகில் இருந்த அவரது காதலி அவரைத் தடுக்க முயன்றபோது அவரையும் குத்த முயன்றுள்ளார். இறுதியில் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் ரியான், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதேநேரத்தில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.