ஓசூர் அருகே சாலையோரம் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்ட பொதுமக்கள் அருகே உள்ள ஆசிரமத்தில் சேர்த்தனர்.
தமிழக - கர்நாடக எல்லையை ஒட்டியுள்ளது ஈகள்ளஹள்ளி கிராமம். இதனை ஒட்டியுள்ள சர்ஜபுரா சாலை ஓரம் இருந்த கோயில் அருகே மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அந்த வழியாகச் சென்றவர்கள் சிலர் அவரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மூதாட்டியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். மேலும், அவருக்குத் தண்ணீரும், உணவும் கொடுத்தனர். அவர் சீரான நிலைக்கு வந்ததை அடுத்து, அவரிடம் அங்கிருந்தவர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது, அந்த மூதாட்டி தனது பெயர் ஒபோவா என்றும், 80 வயது ஆவதாகவும் தெரிவித்துள்ளார். பொம்மசந்திரா பகுதியில் வசித்து வரும் தனது மகள் ஆஷா ராணியின் வீட்டில் வாசித்து வந்ததாகவும் தெரிவித்தார். மகளும், மருமகன் மஞ்சுந்தாத்தும் தன்னை தினமும் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறினார். மேலும், நேற்று இரவு தன்னை காரில் ஏற்றி வந்த அவர்கள், சாலை ஓரம் வீசிவிட்டுச் சென்றதாகக் கூறினார்.
தன் காலில் அடிபட்டுள்ளதால் எங்கும் செல்ல முடியாமல் இங்கேயே இரவு முழுவதும் கடும் குளிரில் தவித்ததாகக் கூறி மூதாட்டி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, அந்த பகுதி மக்கள் அவரை, ஆட்டோ மூலம் அருகே உள்ள ஆசிரமம் ஒன்றில் சேர்த்தனர். அங்கு, மூதாட்டிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, அந்த மூதாட்டிக்கு அந்த ஆசிரமத்திலேயே அடைக்கலம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சர்ஜபுரா போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர். மேலும், மூதாட்டியைச் சாலையில் இறக்கிவிட்ட இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். அதில், இரவு காரில் இருந்து மூதாட்டிய இறக்கிவிடப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தது. கிடைத்த சிசிடிவி காட்சியில் வாகன எண் தெளிவாகத் தெரியாததால், மூதாட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மூதாட்டியின் மகள் மற்றும் மருமகனையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை எதிரொலி... அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!