உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை துப்பாக்கியால் காலில் சுட்டு விட்டு 'நாங்க எல்லாம் கேங்ஸ்டர்’ என்று மாணவர்கள் எச்சரிக்கும் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி மையம் ஒன்றுக்குள் புகுந்த இரண்டு மாணவர்கள் அங்கிருந்த ஆசிரியரை காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அதில், ”ஆறு மாதங்கள் கழித்து திரும்பி வருவோம். 40 முறை அவரை சுடுவோம். இன்னும் 39 முறை மீதம் உள்ளது” என கூறி வீடியோ வெளியிட்டிருந்தனர். உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இரண்டு மாணவர்களை கைது செய்துள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்டு காலில் பலத்த காயங்களுடன் சுமித் என்ற ஆசிரியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் மற்றொரு ஆசிரியருக்கும் இடையேயான போட்டியில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் மூன்று சிறுவர்கள் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புஷ்பா மற்றும் பவுக்கால் ஆகிய திரைப்படங்களில் வந்த காட்சிகளை பார்த்து கொலை செய்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதையும் வாசிக்கலாமே...