மதுரை: மதுரையில் பூ விவசாயிகளை ஆபாசமாக திட்டிய சிறப்பு உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் கூடல்புதூர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ-யாக பணிபுரிபவர் தவமணி (55). இவர் காலை நேரத்தில் பரவை மார்க்கெட் அருகே திண்டுக்கல் - மதுரை ரோட்டிலுள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்தார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து பூ வியாபாரிகள் தாங்கள் விளைவித்த பூக்களை வேன் ஒன்றில் ஏற்றிக்கொண்டு மதுரை பூமார்க்கெட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர்கள் வந்த வேனை மறித்த காவலர் தவமணி, "லோடு மட்டுமே ஏற்றிச் செல்லவேண்டும்; ஆட்களை ஏற்றிச் செல்லக்கூடாது” என, அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு அவர்கள், “நாங்கள் விவசாயிகள் தானே, பூக்களை ஏற்றிக்கொண்டு உடன் செல்கிறோம்” என கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை திடீர் வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது, காவலர் தவமணி ஆபாச வார்த்தைகளால் விவசாயிகளை திட்டியதாகத் தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது பற்றிய தகவல் மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் கவனத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, காவலர் தவமணி இன்று காவல் ஆணையரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பொது இடத்தில் ஆபாசமாக, தகாத வார்த்தைகளால் திட்டிய செயலை ஏற்க முடியாது என்ற அடிப்படையில் காவலர் தவமணி தற்காலிக பணி நீக்கம் செய்து காவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் மதுரை மாநகர காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.