காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு.. 7 பெட்டிகளின் கண்ணாடி உடைப்பு!


ரயில் கண்ணாடிகள் உடைப்பு

சென்னைக்கு வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி எக்ஸ்பிரஸ்

சென்னை - மைசூர் இடையே காவேரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் தொடங்கி, திருவள்ளூர், ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக மைசூர் சென்றடையும். சென்னையிலிருந்து இரவு 9 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் காலை 6 மணிக்கு மைசூரைச் சென்றடையும். அதேபோல், மைசூரில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு காலை 7 மணிக்கு சென்னை வந்தடையும்.

காவிரி எக்ஸ்பிரஸ்

இந்நிலையில், நேற்று இரவு மைசூருவில் புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் அதிரவிரைவு ரயில் இன்று காலை 7 மணிக்குச் சென்னை சென்ட்ரலை வந்தடைந்தது. இதையடுத்து, அந்த ரயில் கும்மிடிப்பூண்டியில் உள்ள டிப்போவுக்கு சென்றது. அப்போது, திருவொற்றியூர் அருகே சென்ற போது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 7 பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. பெட்டிகள் காலியாக இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரயில் நிலையம் வந்ததும், அதிகாரிகள், ரயிலை ஆய்வு செய்தனர். ரயில் பெட்டிகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

x