ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி


காருக்குள் திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடி

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு தப்பி வந்த பெண், ஓடும் காருக்குள்ளேயே தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரிதா (23). பல்லாரி சிறுகுப்ப தெக்கலக்கோட்டில் வசிப்பவர் சிவபிரசாத் (25). இருவரும் சமூக வலைதளங்களில் அறிமுகமாகி பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.

சிவபிரசாத் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு அம்ரிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அம்ரிதாவை வேறு மாப்பிள்ளை பார்த்து அவசரமாக திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அம்ரிதா, வீட்டை விட்டு வெளியேறி சிறுகுப்பா சென்றார்.

அங்கிருந்து சிவபிரசாத், அம்ரிதா ஆகியோர் காரில் புறப்பட்டனர். அப்போது அமிர்தாவின் பெற்றோர் அவர்களை துரத்திவரும் விவரம் தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்தவாறே இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். பின்னர் அமிர்தாவின் கழுத்தில் சிவபிரசாத் தாலி கட்டினார். இதையடுத்து காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு நள்ளிரவில் தேகலகோட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இரவு நேரம் என்பதால் போலீஸார் அம்ரிதாவை மகளிர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த அம்ரிதாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்பு மையத்துக்குச் சென்று தகராறு செய்தனர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் முன்னிலையில் அம்ரிதாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.

அம்ரிதாவின் உறவினர்கள்

ஆனால் பெற்றோருடன் செல்ல அவர் மறுத்தார். காதல் கணவனுடன் தான் வாழ்வேன் என அவர் உறுதியாக தெரிவித்ததால் அவரின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் பெற்றோரை போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x