புதுச்சேரி: புதுச்சேரியில், கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற தலைமைக் காவலர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சகோதரர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலன் கடை அம்மா நகரை சேர்ந்தவர் சதீஷ் (22). இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சதீஷை கொலை முயற்சி வழக்கில் முத்தியால்பேட்டைபோலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷ் அம்மா நகரில் உள்ள வீட்டில் பதுங்கியிருப்பதாக புதுச்சேரி போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் சிறப்பு நிலை தலைமை காவலர் வசந்துக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து இதுபற்றி முத்தியால்பேட்டை க்ரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வசந்த் மட்டும் தனியாக அம்மா நகரில் உள்ள சதீஷ் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சதீஷை தலைமைக் காவலர் வசந்த் துரத்திப் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் சேர்ந்து அங்கிருந்த குக்கர் மற்றும் கற்களைக் கொண்டு வசந்த் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வசந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார். இதையடுத்து சதீஷ் உள்ளிட்ட அனைவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதற்குள்ளாக அங்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை க்ரைம் போலீஸார், காயமடைந்த வசந்தை மீட்டு கதிகாமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் வசந்தை சேர்த்தனர். தற்போது அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் காவலர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து தவகலறிந்த புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்பி-யான நாரா சைதன்யா, எஸ்பி-யான வம்சித ரெட்டி, வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சதீஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி, சசோதரர்கள் பிரதீப் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சேர்ந்து தலைமை காவலர் வசந்தை தாக்கியுள்ளனர் என்பதும், போலீஸாரிடம் சதீஷ் சிக்காமல் தப்பிச் செல்ல அவரது மற்றொரு சகோதரரான சரவணன் உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் உள்ளிட்ட 5 நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.