திருப்பதியில் கடத்தல்; 12 மணி நேரத்தில் சென்னை சிறுவன் மீட்பு


சென்னை சிறுவன் மீட்பு

திருப்பதியில் கடத்தப்பட்ட இரண்டு வயது ஆண் குழந்தை 12 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டனர். குழந்தையை கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகர் -மீனா. இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சந்திரசேகர் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அங்கு பக்தர்கள் கூட்டம் அலை‌ மோதியதால் இரண்டு நாட்கள் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று இரவு தரிசனம் முடிந்து சந்திரசேகர் -மீனா தம்பதி சென்னை வருவதற்காக திருமலா பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.

கடத்தி செல்லப்பட்ட சிறுவன்

இரவு 12 மணிக்கு பிறகு பேருந்து இயக்கப்படாததால் சந்திரசேகர்-மீனா தம்பதியினர் தனது இரு குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கினர். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இவர்களது இரண்டு வயது மகன் முருகனை கடத்தி சென்றார். சற்று நேரத்தில் மீனா கண்விழித்து பார்த்த போது தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை முருகன் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே திருமலா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்தின் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து போலீஸார் ஐந்து தனிப்படைகள் அமைத்து திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை போலீஸார் தீவிரமாக தேடிவந்தனர்.

கடத்தி செல்லப்பட்ட சிறுவன்

இதற்கிடையே குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை போலீஸார் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த சுதாகர் என்பதும் இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனநிலையில் குழந்தை பாக்கியம் இல்லாததால் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x