பத்திரப்பதிவு செய்த நில ஆவணங்களை வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்:  சார் பதிவாளர் உட்பட 2 பேர் கைது


கைது செய்யப்பட்ட சிவலோகநாதன் மற்றும் ஆறுமுகம்

திருவள்ளூர்: பத்திரப்பதிவு செய்த நில ஆவணங்களை அளிக்க ரூ.10 யிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள ஆர்.ஜெ.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. பழனிக்கும், இவரது அண்ணனுக்கும் பாலாபுரம், மகான்காளிகாபுரம் ஆகிய பகுதிகளில் பூர்விக சொத்தான 2 ஏக்கர் நிலம் இருந்தது.இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சகோதரர்கள் இருவரும், தங்கள் வாரிசுகள் 5 பேருக்கு, 2 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து, கடந்த ஜூன் 21-ம் தேதி ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தனர்.

அவ்வாறு பத்திரபதிவு செய்த நில ஆவணங்களை அளிக்க ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர்(பொறுப்பாளர் ) சிவலோகநாதன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.ஆனால், பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. ஆகவே, பழனி சிவலோகநாதன் மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.இதனையடுத்து, சிலலோகநாதனை கையும் களவுமாக பிடிக்க திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின் படி, செவ்வாய்க்கிழமை ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் சிவலோகநாதனிடம் ரசாயண பவுடர் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக அளிக்கச் சென்றார் பழனி. அப்போது, சிவலோகநாதனின் அறிவுறுத்தலின் படி, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த, ஆவண எழுத்தரான ஆறுமுகம், ரூ.10 ஆயிரத்தை பழனியிடம் பெற்றார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் திருவள்ளூர் டிஎஸ்பி ராமச்சந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் சிவலோகநாதனையும், ஆறுமுகத்தையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

x