மதுரை: தோப்புக்குள் வைத்து பெண்ணைக் கொன்ற வழக்கில் கூட்டுறவு வங்கி ஊழியர் கைது


இளங்கோவன்

மதுரை: மதுரை மாவட்டம் விரகனூர் அருகே தோப்புக்குள் வைத்து பெண்ணைக் கொன்ற வழக்கில் கூட்டுறவு வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே விரகனூர் - ராமேசுவரம் சுற்று சாலையிலுள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கொலை செய்யபட்டு சடலாமாக கிடந்துள்ளார். தகவலறிந்த சிலைமான் போலீஸார் உடலை மீட்டு விசாரித்தனர். மதுரை எஸ்பி-யான அரவிந்த் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 2 தனிப்படையினர் இறந்த பெண்ணின் புகைப்படத்தை வைத்து துப்புத் துலங்கினர். விசாரணையில், இறந்தவர் சிவகங்கை மாவட்டம், இடைக் காட்டூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி கலைச்செல்வி (45) என தெரியவந்தது.

இருப்பினும், கொலையாளியைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சவால் இருந்தது. பெண்ணின் அலைபேசி எண் மற்றும் சிசிடிவி பதிவுகளை சேகரித்து தொழில்நுட்ப ரீதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவம் நடந்த இடத்திற்கு ஒருவர் தேவையின்றி டூவீலரில் வந்து சென்றது தெரிந்தது. டூவீலரின் பதிவெண் மூலம் முகவரியை சேகரித்து விசாரித்தபோது, திருப்பாச்சேத்தி அருகிலுள்ள அன்னியேந்தலைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியர் இளகோவன் (55) என்பது உறுதியானது.

கரும்பு விவசாய லோன் தொடர்பாக கலைச்செல்வி, இடைக்காட்டூர் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்த இளகோவனை அடிக்கடி சந்தித்துள்ளார். இதில் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. கலைச்செல்விக்கு இளங்கோவன் ரூ.6 லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் கடனை திருப்பிக் கேட்டு இளங்கோவன் தொந்தரவு செய்துள்ளார்.

ஜூலை 9-ம் தேதி மதுரையில் ஒருவரிடம் ரூ.6 லட்சத்தை வாங்கித் தருவதாக கலைச்செல்வி கூறியுள்ளார். பணத்தை வாங்க டூவீலரில் இளங்கோவன் மதுரை தெப்பக்குளம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது இருவரும், விரகனூர் அருகேயுள்ள தனியார் தோட்டத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இளங்கோவன் இரும்பு கம்பியால் கலைச்செல்வியின் தலையில் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். போலீஸ் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்ததை அடுத்து இன்று இளங்கோவன் கைது செய்யப்பட்டார்.

x