எடப்பாடி காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - சேலத்தில் பரபரப்பு


சேலம்: எடப்பாடியில் உள்ள காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே ஜலகண்டாபுரம் சாலையில் எடப்பாடி காவல் நிலையம் இயங்கி வருகிறது. எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து இரண்டு மர்ம பொருள்கள் விழுந்து வெடித்து சிதறியது.

உடனடியாக காவல் நிலையத்தின் உள்ளே இருந்த போலீஸாரும், வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும், மர்மபொருள் வெடித்து சிதறியதால் பற்றி எறிந்த தீயை அணைத்தனர். இதனையடுத்து, மர்ம நபர்கள் காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசி இருக்கலாம் என்பதை போலீஸார் உறுதி செய்தனர். எனவே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவல் நிலைய வளாகத்தில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், ஒரு பாட்டில் மட்டும் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி காவல் நிலையம் அருகிலேயே நகராட்சி துவக்கப்பள்ளி, இ -சேவை மையம், நூல் நிலையம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

x