சென்னை: திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், கற்பக கன்னியம்மன் கோயில் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி ஷாலினி. இவர்களது 5 வயது மகன் அலோக்நாத் தர்ஷன். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிறுவன் தர்ஷன், தாத்தா சேகர் (58) ஓட்டிச் சென்ற ஆட்டோவில் பயணித்தார்.
கூடவே அவரது பாட்டியும் இருந்துள்ளார். ஆட்டோ மெரினா காமராஜர் சாலையில் சென்றது. அந்த நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்வதற்காக போலீஸார் கான்வாய் அமைத்திருந்தனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மகேந்திரன் என்பவர் திடீரென வழி மறித்ததால் சேகர் ஓட்டி வந்த ஆட்டோ நிலைகுலைந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த தர்ஷன் தலையில் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், ஆட்டோவை ஓட்டிய சேகர் மற்றும் சம்பந்தப்பட்டகாவலரும் காயம் அடைந்துள்ளார். ஆட்டோவை அஜாக்கிரதையாக நிறுத்தி, விபத்து ஏற்பட்டு சிறுவன் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறி காவலர் மகேந்திரன் மீது அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
முன்னதாக, விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி விட்டு சென்றார்.