காங்கயம்: காங்கயத்தில் இருசக்கர வாகனத்துக்கான மாதத் தவணை செலுத்தவில்லை என பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பாஜக ஒன்றிய பொது செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
காங்கயம் அருகே காந்திநகரை சேர்ந்தவர் சங்கர் (24). இவர் கடந்த பிப்ரவரி மாதம் காங்கயம் - கோவை சாலையில் தனியார் பைனான்ஸ் நடத்தி வரும் பாஜக தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளராக இருக்கும் சதிஷ்குமார் (30) என்பவரிடம், தனது இருசக்கர வாகனத்துக்கு ரூ. 50 ஆயிரம் கடன் பெற்றார். இதற்கு மாத தவணையாக ரூ. 2,400 வீதம், 21 மாதங்களுக்கு கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் சங்கர் ஒரு மாதத்துக்கான தவணை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சதிஷ்குமார், சங்கரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று (ஆக.4) பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 2 பேர், சங்கரை அலுவலகத்துக்கு வரச்சொல்லியுள்ளனர். அதன்படி அங்கு வந்த சங்கரிடம், சதிஷ்குமார் பணம் கேட்டுள்ளார். அப்போது சாதி பெயரை சொல்லி, முகம் மற்றும் கை, கால்களில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சங்கர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாஜக நிர்வாகியும் பைனான்ஸ் அதிபருமான சதிஷ்குமாரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி காங்கயம் போலீஸாரிடம் சங்கர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சதிஷ்குமாரை இன்று கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.