ஆந்திராவில் இருந்து வாணியம்பாடிக்கு பஸ்சில் கள்ளச்சாராயம் கடத்தல்: பேருந்து ஓட்டுநர், நடத்துநர் கைது


வாணியம்பாடி: ஆந்திராவில் இருந்து மினி பேருந்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல் துறையினர் இன்று (5-ம் தேதி) கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர மாநில எல்லைப் பகுதியான தேவராஜபுரம், வீரணாமலை கிராமங்களுக்கு வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் மினி பேருந்து இயக்கப் படுகிறது. இந்நிலையில், தமிழக - ஆந்திர மாநில எல்லை பகுதியிலும், மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை மினி பேருந்து மூலம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவு பேரில் வாணியம்பாடி காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சுங்கச்சாவடி அமைத்து மது கடத்தலை கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில், வாணியம்பாடி நகர காவல்துறையினர் ஆந்திர மாநிலத்தில் இருந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்திற்கு வந்த தனியார் மினி பேருந்து ஒன்றை சந்தேகத்தின் பேரில் இன்று (திங்கள்கிழமை) திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த தனியார் மினி பேருந்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, பேருந்து ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநில எல்லையில் இருந்து கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பேருந்தில் கடத்தி வந்த வாணியம்பாடியில் இறக்கி விடுவதாகவும், அங்கிருந்து கள்ளச்சாராய வியாபாரிகள் அதை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். அதற்கான தொகையை தாங்கள் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து நகர காவல்துறையினர் தனியார் மினி பேருந்தை பறிமுதல் செய்து மினி பேருந்து ஓட்டுநரான ஆரிமணி பெண்டா பகுதியை சேர்ந்த ஏமாந்திரி (24), நடத்துநர் சோபன்பாபு (42) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 30 சாராய பாக்கெட்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x