வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கொலை: சிக்கிய வாலிபரிடம் தீவிர விசாரணை!


ஆசிரியை கொலை

தூத்துக்குடி அருகே மணப்பாடு பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் அவரது உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் மெட்டில்டா (53). இவரது கணவர் ரஸ்கின்டிரோஸ் மும்பையில் வசித்து வருகிறார். மகன் சென்னையில் உள்ளார். இந்த நிலையில், மெட்டில்டா பண்டாராஞ்செட்டி விளை பகுதியில் தனியாக வசித்து வந்தார். அத்துடன் குலசேகரன் பட்டினத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மெட்டில்டா இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

உறவுக்காரரான தீபக், மெட்டில்டாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக இருந்த ஆசிரியை பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x