புதுச்சேரி எம்.பி.பி.எஸ் மாணவர் மதுரையில் தற்கொலை


மதுரை: புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ் மாணவர், மதுரையில் தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது மகன் முகேஷ்(20). இவர் புதுச்சேரியிலுள்ளி பிம்ஸ் (BIMS) மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தார். இவர் எம்பிபிஎஸ் தேர்வில் இரு பாடங்களில் தேர்ச்சி பெறாததால் பெற்றோர் திட்டியுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனையும் தராமல் பெற்றோர்கள் எடுத்து வைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ், வீட்டைவிட்டு வெளியேறி கடந்த 3 வாரங்களாக வீட்டிற்கு செல்லாமல் வெளியே தங்கியுள்ளார். இதற்கிடையில் அவர் மதுரையில் டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஜூலை 31-ம் தேதி அறை எடுத்து தங்கினார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் தங்கும் விடுதி பணியாளர் உணவு கொடுக்கச் சென்றபோது அறையின் கதவு பூட்டியிருந்தது. வெகுநேரம் தட்டியும் கதவு திறக்காததால் உள்ளே சென்று பார்த்தபோது முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுகுறித்து திடீர் நகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எம்பிபிஎஸ் மாணவர் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

x